‘அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முறிந்தது’ - 25% கட்டண விதிப்பால் கனடா பிரதமர் அறிவிப்பு

மார்க் கார்னி
மார்க் கார்னி
Updated on
1 min read

ஒட்டோவா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டோமொபைல் பொருள்களுக்கான 25 சதவீத கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டுடனான பழைய உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் கார்னி, “நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு அடிப்படையில் அமெரிக்காவுடனான பழைய ஆழமான உறவு முடிவுக்கு வந்து விட்டது. நமது பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுக்கான பரந்த அளவிலான ஒத்துழைப்புக்கான நேரம் விரைவில் வரும்.

கன்னடியர்களாகிய நமக்கு சுதந்திரம் உள்ளது. நமக்கு அதிகாரம் உள்ளது. நமது வீட்டில் நாமே எஜமானர்கள். நமது விதியை நாமே தீர்மானிப்போம். அமெரிக்கா உட்பட வேறு எந்த வெளிநாட்டினை விடவும் நம்மால் மட்டுமே நமக்கு நாமே அதிகம் கொடுக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

அதேபோல் தலைநகர் ஒட்டோவாவில் மாகாணத் தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் ட்ரம்பின் புதிய கட்டண விதிப்பு குறித்து கார்னி விவாதித்தார். இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக ட்ரம்பின் கட்டண விதிப்பு நடவடிக்கை அமெரிக்க வாடிக்கையாளர்களின் பொருளாதாரத்தை அழுத்தத்துக்குள்ளாக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ட்ரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் பொருள்களுக்கு 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், "இது ஒரு நேரடியானத் தாக்குதல், நாங்கள் எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்போம். எங்கள் நிறுவனங்களைப் பாதுகாப்போம், நாட்டினைப் பாதுகாப்போம்" என்று தெரிவித்திருந்தார்.

கனடாவில் ஆட்டோமொபைல் துறையில் சுமார் 1, 25,000 பேர் பணிபுரிகின்றனர். மேலும் அதைச் சார்ந்த துணை தொழில்களில் 50 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி துறையாக ஆட்டோமொபைல் உள்ளது. டொனால்ட் ட்ரம்ப் முன்பு கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து செய்யப்படும் வாகன இறக்குமதிகளுக்கு கட்டண விதிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமனியத்துக்கு 25 சதவீதம் கட்டணம் விதித்திருந்தது. இது அமெரிக்காவுடன் வர்த்தக உறவு கொண்டிருக்கும் முக்கிய உறவு நாடான கனடாவுக்கு பெரும் அடியாக அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in