

சிரியாவின் ஸ்வேடா மாகாணத்தில் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 220 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பிடிஐ, "சிரியாவின் தென்பகுதியிலுள்ள ஸ்வேடா மாகாணத்தில் புதன்கிழமை மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தினர் இந்தத் தாக்குதலில் 220 பேர் பலியாகினர். இதில் 127 பேர் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று கொண்டு உள்ளது” என்று கூறியுள்ளது.
தீவிரமாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில், ஸ்வேடா மாகாணம்தான் இதுவரை வன்முறை சம்பவங்களால் பெருமளவு பாதிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் ஸ்வேடா மாகாணத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவில் அமெரிக்கா மற்றும் சிரியா அரசின் தொடர் நடவடிக்கைகளால் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளை சிரியா அரசு கைப்பற்றியது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.