போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இந்தோனேசியாவில் 3 தமிழருக்கு மரண தண்டனை?

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இந்தோனேசியாவில் 3 தமிழருக்கு மரண தண்டனை?
Updated on
1 min read

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சிங்கப்பூரில் வெளிக்கிழமைதோறும் வெளியாகும் 'தப்லா' ஆங்கில வார இதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகிய மூவரும் சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 'லெஜண்ட் அக்வாரிஸ் என்ற சரக்கு கப்பலில் 106 கிலோ 'கிரிஸ்டல் மெத்' போதைப் பொருளை கடத்தியதாக இந்தோனேசிய கடல் எல்லையில் அந்நாட்டு அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் கடத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என மூவரும் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் கப்பலின் கேப்டனை கடந்த 14-ம் தேதி நேரில் சாட்சியம் அளிக்குமாறு இந்தோனேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் குறுக்கு விசாரணையை தவிர்க்கும் வகையில் நேரில் ஆஜராகாமல் 'ஜூம்' மூலம் குறைந்த நேரமே ஆஜரானர். இது கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் குற்றமற்றவர்கள் என்பதை உறுதிசெய்ய கேப்டனின் வாக்குமூலம் அவசியமாகும். இந்நிலையில் இந்தோனேசிய சட்டப்படி மூவருக்கும் மரண தண்டனை விதிக்கும்படி அரசுத் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இந்த வழக்கில் மூவரின் வழக்கறிஞர் யான் அப்ரிதோ கூறுகையில், “இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கேப்டனுக்கு தெரியாமல் பெருமளவு போதைப் பொருளை கப்பலில் கடத்திவர வாய்ப்பில்லை. கடத்தலில் இந்த மூவருக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க நாங்கள் முயன்று வருகிறோம்" என்றார். நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கில் ஏப்ரல் 14-ல் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in