Published : 04 Jul 2018 08:53 AM
Last Updated : 04 Jul 2018 08:53 AM

உலக மசாலா: பிறவிக் கலைஞன் கரீம்

ல ஆண்டுகள் பயிற்சி எடுத்த பிறகே தத்ரூபமான ஓவியங்கள் வரைவது சாத்தியமாகும். ஆனால் 11 வயதே ஆன கரீம் வாரிஸ் ஓலாமிலிகான், தன்னுடைய ஓவியங்களால் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்! நைஜீரியாவின் லாகோஸ் நகரில் வசிக்கும் இவர், 6 வயதில் தனக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைய ஆரம்பித்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓர் ஓவியப் பயிற்சி அகாடமிக்கு அருகே இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. மிக ஏழ்மையான குடும்பம் என்பதால், மகனை ஓவியப் பயிற்சியில் சேர்த்து விடுவதற்கு அவர்களால் இயலவில்லை. அதற்காகத் தன் முயற்சியைக் கரீம் கைவிடவில்லை. ஓவிய அகாடமியின் மூலையில் அமர்ந்து, மற்ற மாணவர்கள் பயிற்சி செய்வதுபோல் தானும் செய்துகொண்டிருப்பார். ஒருகட்டத்தில் கரீமின் ஓவியங்களைப் பார்த்து வியப்படைந்த அகாடமி உரிமையாளர்கள், தாங்களாகவே பயிற்சியளிக்க முன்வந்தனர். இன்று தங்கள் மாணவர்களில் மிகச் சிறந்தவர் கரீம் என்று பெருமிதம் கொள்கிறார்கள்.

“என்னுடைய ஓவியத் திறமையைக் கண்டுபிடித்து, அங்கீகரித்தது அயோவால் ஆர்ட் அகாடமிதான். நான் வண்ணங்களை விட்டு, தத்ரூபமான ஓவியங்களுக்கு மாறியது என்னுடைய ஏழ்மையால்தான். காகிதம், தூரிகை, வண்ணங்கள் வாங்க என்னிடம் வசதி இல்லை. அதனால் பேனா, பென்சில் மூலம் மனித முகங்களை வரைவதில் ஆர்வம் செலுத்தினேன். அம்மா மளிகை சாமான் வாங்கி வரச் சொல்லிப் பணம் கொடுப்பார். அதில் கொஞ்சம் வெள்ளைத் தாள்களை வாங்கிக் கொள்வேன். வீட்டில் மின்சார வசதி இல்லை. அதனால் நள்ளிரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில்தான் வரைவேன். அம்மாவும் அப்பாவும் கடுமையாக உழைத்தால்தான் நாங்கள் சாப்பிடவே முடியும். உழைப்பு எப்படிப் பணமாக, உணவுப் பொருளாக, சமைக்கப்பட்ட உணவாக மாறி எங்கள் தட்டுக்கும் வாய்க்கும் வந்து சேர்கிறது என்பதை நான் அனுபவத்தின் வாயிலாகக் கண்டறிந்தவன். அதனால்தான் என்னுடைய ஓவியங்களில் ஏழ்மையும் உணவும் பிரதானமான விஷயங்களாக இருக்கின்றன. இன்று தொழில்முறை கலைஞனாகப் பலருக்கும் ஓவியங்களை வரைந்து கொடுக்கிறேன். ஆனாலும் எங்கள் குடும்பத்தின் வறுமை இன்னும் மறையவில்லை. பொதுவாக நைஜீரியப் பெற்றோர் தங்கள் குழந்தைகள், மருத்துவராகவோ வழக்கறிஞராகவோதான் வர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் என்னை என் விருப்பத்துக்கு பெற்றோர் விட்டுவிட்டனர். எங்கள் குடும்பம் இருக்கும் நிலையில் இது பெரிய விஷயம். என் போன்ற வித்தியாசமான திறமை கொண்டவர்களை அரசாங்கமே கண்டறிந்து, ஊக்கப்படுத்த வேண்டும். நைஜீரியாவின் புகழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். தத்ரூப ஓவியங்களைத் தவிர்த்து வண்ண ஓவியங்கள், முக ஓவியங்கள் என்று பல்வேறு ஓவியங்களையும் வரைந்து வருகிறேன். நைஜீரியாவின் அழகிய முகங்களை உலகம் முழுவதும் தெரிய வைக்கும் தத்ரூப ஓவியங்களே எனக்கு மிகவும் பிடித்தவை” என்கிறார் கரீம்.

“நீ தெரு ஓவியனாக உன்னை நினைத்துக்கொள்ளாதே, வான் கா, டாவின்சி போன்ற மிகப் பெரிய ஓவியனாக நினைத்துக்கொள் என்று கரீமுக்கு அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நைஜீரியாவின் மிக இளம் வயது தொழில்முறை ஓவியன் கரீம்தான்” என்று பெருமையோடு சொல்கிறார் ஓவிய அகாடமியின் உரிமையாளர்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் கரீமை சுமார் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

பிறவிக் கலைஞன் கரீமைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x