

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் பிரிட்டன் அரசின் நிலைப்பாடு முற்றிலும் நேர்மையற்றது எனக் கூறி, பிரிட்டன் பெண் அமைச்சர் பரோனஸ் சயீதா வர்ஸி ராஜிநாமா செய்துள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பிரிட்டன்வாசியான சயீதா வர்ஸி, பிரிட்டனின் முதல் பெண் முஸ்லிம் அமைச்சராவார்.
பிரதமர் டேவிட் கேமரூனின் அமைச்சரவையில், கேபினட் அந்தஸ்து பெற்ற வெளியுறவு அலுவலகம், நம்பிக்கை மற்றும் மதங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தில், “இஸ்ரேல்-காஸா போர் தொடர்பாக பிரிட்டன் அரசின் நிலைப்பாடு தார்மீக அடிப்படையில் நேர்மையற்றது. இது பிரிட்டனின் தேச நலனுக்கு உகந்ததல்ல. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நமது நற்பெயரைத் தக்கவைக்காது” என சயீதா வர்ஸி தெரிவித்துள்ளார்.
இந்த ராஜினாமா முடிவு கடினமான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சயீதா வர்ஸி ட்விட்டர் தளத்தில் “எனது ராஜினாமா கடிதத்தை மிகுந்த வருத்தத்துடன் பிரதமருக்கு அனுப்பியுள்ளேன். காஸா மீதான அரசின் கொள்கைக்கு ஆதரவாக இருக்க என்னால் முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரிட்டன் துணைப் பிரதமர் நிக் கிளெக் கூறும்போது, “காஸா விவகாரத்தில் அரசுத்துறையில் பல்வேறுவிதமான கருத்துகள் நிலவுகின்றன என்பதில் ரகசியம் ஏதுமில்லை. வர்ஸிக்கு இது தொடர்பாக உறுதியான கருத்து உள்ளது” என்றார்.