Published : 13 Mar 2025 10:07 AM
Last Updated : 13 Mar 2025 10:07 AM

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 30 மணி நேர மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது எப்படி?

இஸ்லாமாபாத்: பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இதில் ரயில் பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குவெட்டாவில் இருந்து பெஷாவார் நோக்கிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலைப் படையினர் வெடிவைத்து தடம்புரளச் செய்து பின்னர் கடத்தினர். இந்தத் தாக்குதல், கடத்தல் சம்பவத்துக்குப் பின்னால் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதக் கும்பல்கள் இருப்பதை உளவுத் துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசு இத் தாக்குதல் போன்று பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் அதன் மண்ணில் அரங்கேறாமல் தவிர்க்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தீவிரவாதிகளுடன் சண்டை தொடர்ந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ரயில் பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்தனர். தற்கொலைப் படை தீவிரவாதிகள் உள்பட 33 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.” என்று தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன? முன்னதாக பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

அப்போது பலுச் விடுதலை படையை (பிஎல்ஏ) சேர்ந்த தீவிரவாதிகள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ரயிலில் உள்ள பிணைக் கைதிகளை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் களத்தில் இறங்கினர். நேற்று 2-வது நாளாக நடைபெற்ற மீட்புப் பணியில் இதுவரை 155 பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x