Published : 11 Mar 2025 08:49 AM
Last Updated : 11 Mar 2025 08:49 AM
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார் அதன் தலைவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தள செயல்பாடுகள் முடங்கின. அதன்பிறகு மீண்டும் சரிசெய்யப்பட்டு, மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளம் முடங்கியது. பல மணி நேரம் இந்த முடக்கம் நீடித்தது.
இது குறித்து எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் “எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சைபர் தாக்குதல் பற்றி எக்ஸ் தளப் பதிவில் மஸ்க், “எக்ஸ் தளத்தின் மீது அன்றாடம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் இது மிகப்பெரிய தாக்குதல். இதன் பின்னணியில் மிகப்பெரிய வலை அல்லது நாட்டின் தலையீடு இருக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார். பின்னர் அளித்த ஊடகப் பேட்டியில் அது உக்ரைனாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
உக்ரைனுக்கு ஸ்டார்லிங் சேவை - உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் மூண்டது. மூன்றாண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனுக்கு இணைய சேவை வழங்கி வருகிறது எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம்.
இந்நிலையில் அண்மையில் மஸ்க் அளித்தப் பேட்டி ஒன்றில், “உக்ரைனுக்கு வழங்கிவரும் இணைய சேவையை நிறுத்தினால் அந்நாடு சீர்குலைந்துவிடும், உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக ஸ்டார் லிங்க் சேவையே இருக்கிறது.” என்று கூறியிருந்தார். இருப்பினும் அவ்வாறு செய்யப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறாக ரஷ்யப் போரில் உக்ரைனின் நிலைப்பாட்டை எக்ஸ் தள தலைவரும் அமெரிக்க அரசின் செயல் திறன் துறையை (DOGE) நிர்வகிப்பவருமான மஸ்க் தொடர்ச்சியாக விமர்சித்துவந்த நிலையில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தகது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT