Published : 08 Mar 2025 08:49 PM
Last Updated : 08 Mar 2025 08:49 PM

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதலில் 14 பேர் பலி, 30+ காயம்: அமைதிப் பேச்சு நிலை என்ன?

கீவ்: உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில், ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை சனிக்கிழமை உறுதி செய்து தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட 8 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு நிர்வாக கட்டிடம், 30 கார்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கார்கிவ் ஆளுநர் ஒலேக் சினேகுபோவ் டெலிகிராமில் வெளிட்டுள்ள செய்தியில், "கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மாகாணத்திலுள்ள போகோடுகிவ் பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களின் மீது ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர்" என்று தெரிவித்துள்ளார். ஒடேசாவில் நடந்த ஒரு ட்ரோன் தாக்குதல் காரணமாக பல்வேறு தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில், உபகரணங்களுடன் நின்ற ஒரு விவசாய வாகனம், ஒரு சேவை நிலையக் கட்டிடம், ஒரு வானக உதிரி பாக நிலையம், திறந்த வெளியில் இருந்த சூரிய உற்பத்தி பேனல்கள் பாதிக்கப்பட்டன.

அமைதியை விரிவுபடுத்த அமெரிக்க இணைந்து பணியாற்றுகிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில், இந்த இரவு நேரத் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எங்களைப் போலவே அமைதியை விரும்பும் கூட்டாளிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அடுத்த வாரம், ஐரோப்பா, அமெரிக்கா, சவுதி அரேபியாவில் நிறைய வேலைகள் இருக்கும். அமைதியை விரிவுபடுத்துவும், பாதுகாப்புக்கான அடித்தளத்தை வலுப்படுத்தவும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்று அதிபர் ட்ரம்ப் குழுவினருடன் பல்வேறு மட்டங்களில் தீவிரமான பணிகளில் ஈடுப்பட்டோம். நோக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது விரைவில் அமைதி, நம்பகமான பாதுகாப்பே அது. ஒரு ஆக்கபூர்மான அணுகுமுறைக்கு உக்ரைன் உறுதிபூண்டுள்ளது. உதவி செய்து வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "மூன்றாண்டு கால நீண்ட போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைனை விட ரஷ்யாவை சமாளிப்பது மிகவும் எளிது” என்று தெரிவித்தார். என்றாலும் முன்னதாக ட்ரம்ப், ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக அதற்கு தடைகள் விதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சவுதி அரேபியாவில் திட்டமிடப்பட்டுள்ள உக்ரைன் - அமெரிக்க பேச்சுவர்த்தைக்கு முன்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அன்ட்ரீ சிபிஹா அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ருபியோவைச் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திங்கள்கிழமை சவுதி அரேபியாவுக்கு சென்று பட்டத்து இளவரசர் மெகம்மது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பிப்ரவரி இறுதியில் ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்ட நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை உக்ரைன் அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x