Published : 08 Mar 2025 01:19 PM
Last Updated : 08 Mar 2025 01:19 PM
வாஷிங்டன்: பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பினைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் “அவர்கள் செய்ததை யாரோ ஒருவர் அம்பலப்படுத்தியதால் இந்தியா இந்த முடிவெடுத்துள்ளது” என ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் கூறுகையில், "இந்தியா நம்மிடம் மிக அதிகமான வரிகளை வசூலிக்கிறது, அதிகமாக! உங்களால் இந்தியாவில் எதனையும் விற்பனை செய்ய முடியாது. ஒருவழியாக அவர்கள் தங்களின் வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் செய்ததை யாரோ ஒருவர் அம்பலப்படுத்தியதால் அவர்கள் தங்களின் வரிகளைக் குறைக்க விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் உடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டன் சென்றிருந்த நிலையில் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், " இந்திய, அமெரிக்க அரசுகள் பல்வேறு துறைகளில் இருதரப்பு வர்த்தகங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன. இது, BTA மூலமாக பொருட்கள் மற்றும் சேவைகளில் இந்தியா - அமெரிக்கா இருவழி வர்த்தகத்தை வலுப்படுத்தவும், ஆழப்படுத்தவும், வரிகள் மற்றும் வரிகள் அல்லாத தடைகளைக் குறைக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக அமெரிக்கர்களுக்கு நியாயமற்ற வரி விதிப்பு கொள்கைகளை கொண்டிருக்கும் தெற்காசிய நாடுகளுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்போதவாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றிய டொனால் ட்ரம்ப், “அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் நீங்கள் உங்களின் பொருட்களை உற்பத்தி செய்யவில்லையென்றால், அந்தப் பொருட்களுக்காக நீங்கள் ஒரு வரியை செலுத்தவேண்டியது இருக்கும். சில நேரங்களில் அது மிகப்பெரியதாக இருக்கும்.
பிற நாடுகள் அனைத்தும் பல தசாப்தங்களாக அமெரிக்காவுக்கு எதிராக வரிவிதித்து வருகின்றன. இப்போது நாம் அதை அவர்களுக்குத் திருப்பிச் செய்யும் நேரமிது. பல நாடுகள் நாம் அவர்களிடமிருந்து வசூலிப்பதை விட அதிகமான வரிகளை நமக்கு எதிராக விதிக்கின்றன. அது மிகவும் அநீதியானது. இந்தியா நம்மிடமிருந்து 100 சதவீதத்துக்கும் அதிகமாக வாகனக் கட்டணங்களை வசூலிக்கிறது.
ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு எதிரான பரஸ்பர கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. ஏப்ரல் 1-ம் தேதியில் என நான் ஏன் அறிவிக்கவில்லை என்றால், அது முட்டாள்கள் தினத்துடன் ஒத்துப்போவதை விரும்பவில்லை. ஏப்.2-ம் தேதியில் இருந்து அவர்கள் என்ன கட்டணங்கள் நமக்கு விதித்தாலும் நாமும் அவர்களுக்கு ஒரு பரஸ்பர கட்டணத்தை விதிப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT