பாலஸ்தீனத்தில் இருந்து 10 இந்தியர்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை

பாலஸ்தீனத்தில் இருந்து 10 இந்தியர்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை
Updated on
1 min read

பாலஸ்தீனத்தில் பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 இந்தியர்களை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டு உள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேலின் தெற்குப் பகுதி மீது தரை, கடல், வான் வழியாக மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேலை சேர்ந்த 1,139 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 48,440 பேர் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த காசாவும் தரைமட்டமானது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கடந்த ஜனவரியில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

கடந்த 2023-ம் ஆண்டு தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் முழுவதும் சுமார் 80,000 பாலஸ்தீன தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது சுமார் 16,000 இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேலில் கட்டிட பணி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சராசரியாக மாதம் ரூ.1.37 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த சூழலில் 10 இந்திய தொழிலாளர்களை, பாலஸ்தீன ஏஜெண்டுகள் கூடுதல் ஊதியம் தருவதாக ஏமாற்றி மேற்கு கரை பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்குள்ள கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக அவர்கள் பிணைக்கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

10 இந்தியர்களின் பாஸ்போர்ட், விசாக்களை பறித்த பாலஸ்தீன கடத்தல்காரர்கள் அவற்றை பயன்படுத்தி இஸ்ரேல் எல்லைக்குள் அண்மையில் நுழைய முயன்றனர். ஆனால் இஸ்ரேல் சோதனை சாவடியில் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கு கரையில் 10 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி இரவு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மேற்கு கரை பகுதியில் உள்ள அல் - ஐயீம் கிராமத்துக்குள் நுழைந்து 10 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டனர்.

அவர்கள் இஸ்ரேல் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்ட இந்தியர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in