Published : 06 Mar 2025 07:09 PM
Last Updated : 06 Mar 2025 07:09 PM
பிரஸ்ஸல்ஸ்: உக்ரைனுக்கு அளிக்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று அவசர ஆலோசனையை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபரின் அறிவிப்பை அடுத்து, போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு குறுகிய காலத்தில் உதவ வேண்டிய நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய கவுன்சில் தலைமையகத்தில் இன்று அவசர உச்சி மாநாடு நடைபெறுகிறது. ஜெர்மனியின் அடுத்த அதிபர் ப்ரீட்ரிக் மெர்ஸ் மற்றும் உச்சி மாநாட்டுத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர், ஐரோப்பாவின் பாதுகாப்பை குறுகிய காலகட்டத்தில் பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், உக்ரைனுக்கு உடனடியாக கடன் வழங்குவதற்கு ஏற்ப விதிகளை தளர்த்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ரஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்து ஐரோப்பாவை பாதுகாக்க பிரான்சின் அணுசக்தி தடுப்பை பயன்படுத்துவது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு தெரிவிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, இந்த உச்சி மாநாடு குறித்துப் பேசிய இம்மானுவேல் மேக்ரன், "இந்த உச்சி மாநாடு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும். உறுப்பு நாடுகள் தங்கள் ராணுவ செலவினங்களை அதிகரிக்க முடியும். ஐரோப்பாவுக்கு மிகவும் புதுமையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் மிகப் பெரிய அளவில் கூட்டு நிதி வழங்கப்படும். ஐரோப்பாவின் எதிர்காலம் வாஷிங்டன் அல்லது மாஸ்கோவில் முடிவு செய்யப்பட வேண்டியதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன், ஐரோப்பிய நாடுகள் பட்ஜெட் விதிகளை தளர்த்துவதற்கான திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அவரது முன்மொழிவு 150 பில்லியன் யூரோக்கள் (162 பில்லியன் டாலர்) மதிப்புள்ள கடன்கள் மூலம் ராணுவ உபகரணங்களை வாங்க வேண்டும் என்றும், அதற்கேற்ப நாடுகள் தங்கள் பட்ஜெட் விதிகளை தளர்த்தி விதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஐரோப்பா ஒரு தெளிவான ஆபத்தை எதிர்கொள்கிறது என தெரிவித்துள்ள உர்சுலா வான் டெர் லெய்ன், நமது அடிப்படை அனுமானங்களில் சில, குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன என கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த உச்சி மாநாட்டில், உக்ரைன் அல்லது அதன் சொந்த பாதுகாப்புகளுக்கான செலவினங்கள் குறித்த உடனடி முடிவுகளை எடுக்க வாய்ப்பில்லை என்றும், மார்ச் 20-21-ல் நடைபெற உள்ள மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் முடிவுகள் மிகவும் தெளிவாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT