Published : 27 Jul 2018 05:13 PM
Last Updated : 27 Jul 2018 05:13 PM

அனைத்தையும் அழித்துவிடுவோம்: அமெரிக்காவை மிரட்டும் ஈரான்

உங்களிடம் இருக்கும் அனைத்தையும் அழித்துவிடுவோம் என்று ஈரான் படைத் தளபதி அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஈரான்  நாட்டின் செய்தி ஊடகமான தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஈரானின் சிறப்புப் படைப் பிரிவின் தளபதி கசிம் ஈரான் மீதான அமெரிக்காவின் மிரட்டல் குறித்து, "அமெரிக்கா ஒருவேளை ஈரானைத் தாக்கினால் நாங்கள் அவர்களிடமிருக்கும் அனைத்தையும் அழித்துவிடுவோம்" என்று கூறியுள்ளார்.

முன்னர் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, "ஈரானுடனான சமாதானம் என்பது சமாதானங்களுக்கெல்லாம் தாய். ஈரானுடனான போர் என்பது அனைத்து போர்களுக்கெல்லாம் தாய் என்பதை அமெரிக்கா அறிந்திருக்க வேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடியாக ட்ரம்ப் "மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம். இல்லையேல் வரலாற்றில் இதற்கு முன் ஈரான் அனுபவிக்காத துன்பத்தை அனுபவிக்க நேரிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருந்தார்.

அமெரிக்கா, ஈரான் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்  இடையே மோதல் முற்றி வருவது சர்வதேச நாடுகளுக்கிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x