வரிவிதிப்பு எச்சரிக்கைக்குப் பின்பு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு பிரிந்துவிட்டது: ட்ரம்ப் பேச்சு

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைக்கு எதிராக 150 சதவீத வரிவிதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பிறகு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் பிரிந்துவிட்டன என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், “பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை அழிக்க முயன்றனர். அவர்கள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்க முயன்றனர். அதனால் நான் பதவிக்கு வந்ததும், முதல் விஷயமாக டாலரை மாற்ற முயற்சிக்கும் எந்த ஒரு பிரிக்ஸ் நாட்டுக்கும் 150 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று எச்சரித்தேன். உங்கள் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்றேன். அதன் பின்னர் அவர்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு பிரிந்துவிட்டது." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பிப்.13-ம் தேதி, “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருடன் விளையாட விரும்பினால் அவர்கள் 100 சதவீதம் வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும்” என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். மேலும் அவர் ‘பிரிக்ஸ் மரித்துவிட்டது’ என்றும் கூறியிருந்தார். டாலரை அவர்கள் மாற்ற விரும்பினால் அவர்களுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

அதேபோல், ஜனவரியில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு பணத்தை உருவாக்க விரும்பினால் பிரிக்ஸ் நாடுகள் மீது அதிக வரிவிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அதிபராக பதவியேற்பதற்கு முன்பும் ட்ரம்ப் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடக்தக்கது.

கடந்த 2023ம் ஆண்டில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க டாலர் மதிப்பிழப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் கூறுகையில், "பிரிக்ஸ் நாடுகள் தேசிய நாணயங்களில் தீர்வுகளை விரிவுபடுத்தி வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

‘பிரிக்ஸ்’ என்பது, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in