

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளது. "தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அதன் அருகில் உள்ள நகரமான ராவல்பிண்டியிலும் உள்ள ஆப்கானிய குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களை விட்டு வெளியேறி பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர காவல் துறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு முறையான அறிவிப்பும் இல்லாமல் இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்துக்கு எந்தவொரு முறையான தகவலும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் குடியுரிமைச் சான்றிதழுடன் (Afghan Citizens Card) சுமார் 7 லட்சம் பேர், பதிவுச் சான்றிழதழுடன் (Proof of Registration) 13 லட்சம் பேர் பாகிஸ்தானில் வசிக்கின்றனர். இது இல்லாமல், சட்டவிரோதமாக லட்சக்கணக்கான ஆப்கன் நாட்டவர் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான், தங்கள் நாட்டில் உள்ள ஆப்கனிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றதாக அந்நாட்டின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீரும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில், பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டவர்களை பல கட்டங்களாக வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாகவும், முதல் கட்டத்தின் கீழ், ஆப்கான் குடிமக்கள் அட்டை (ACC) வைத்திருக்கும் ஆப்கான் நாட்டவர்கள் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், பின்னர் அவர்கள் சட்டவிரோத மற்றும் ஆவணமற்ற அகதிகளுடன் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் டான் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையில், மூன்றாம் நாடுகளில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் ஆப்கானியர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆப்கானியர்கள், அமெரிக்கா செல்ல காத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.