இந்தியாவுக்கு வழங்கிவந்த 21 மில்லியன் டாலர் நிதி நிறுத்தம்: மஸ்க் தலைமையிலான குழு அதிரடி

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Updated on
1 min read

நியூயார்க்: கோடீஸ்வரர் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அரசின் செயல்திறன் துறைக்கான தலைவராக கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்கை கடந்த மாதம் தேர்வு செய்தார். நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீணான செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் இதன் நோக்கம். அதன்படி (DOGE - The Department of Government Efficiency ) பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் சமீபத்திய ஒன்றுதான் இந்த நிதி ரத்து அறிவிப்பு.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அமெரிக்க வரிசெலுத்துவோரின் டாலர்கள் பின்வரும் வகைகளுக்கு செலவிடப்பட இருந்தன. அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.” என்று குறிப்பிடப்பட்டு ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், மால்டோவா நாட்டுக்கான 22 மில்லியன் டாலர் மற்றும் இந்தியாவில் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிப்பதற்கான 21 மில்லியன் டாலர் உட்பட பல்வேறு நாடுகளுக்கான நிதி நிறுத்தம் விவரம் இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்துக்கு சில நாட்களுக்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனது அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்கை சந்தித்தார். அப்போது இருநாட்டு தலைவர்களும் இந்தியா - அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஸ்பேஸ் எக்ஸின் தலைமை செயல் அதிகாரி மஸ்க், தனது மூன்று குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

DOGE நிதி நிறுத்த உத்தரவு விவரம்:

> வங்கதேசத்தில், அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்.

> நேபாளத்துக்கான பல்லுயிர் பாதுப்புக்கான 10 மில்லியன் டாலர்.

> லைபீரியாவுக்கான 1.5 மில்லியன் டாலர்.

> மாலி நாட்டுக்கான 14 மில்லியன் டாலர்

> தெற்கு ஆப்பிரிக்காவுக்கான 2.5 மில்லியன் டாலர்

> ஆசியாவுக்கு கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கு 47 மில்லியன் டாலர் நிதி உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in