Last Updated : 16 Jul, 2018 01:58 PM

 

Published : 16 Jul 2018 01:58 PM
Last Updated : 16 Jul 2018 01:58 PM

அமெரிக்காவில் இந்திய மாணவரைக் கொன்ற இளைஞர் சுட்டுக்கொலை: தப்பி ஓட முயன்றபோது போலீஸார் சுட்டனர்

 அமெரிக்காவின் கனாஸ்சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவரைச் சுட்டுக் கொன்றவராகக் கருதப்படும் இளைஞரைக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞரை  போலீஸார் சுட்டுக்கொன்றனர்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (வயது 25). ஐ.டி. இன்ஜினீயரான சரத் கொப்பு, மிசோரி மாநிலம், கனாஸ் சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

மேலும், சரத் கொப்பு படித்துக்கொண்டே, அங்குள்ள ஜேபிஷ் அன்ட் சிக்கன் மார்க்டெ எனும் ஹோட்டலில் பகுதி நேரமாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மாலை வழக்கம் போல் ஹோட்டலுக்கு சரத் கொப்பு சென்றார். ஹோட்டலுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர், ஹோட்டலுக்கு வந்திருந்தவர்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, சரத் கொப்புவை துப்பாக்கியால் சுட்டு அந்த நபர் தப்பிவிட்டார்.

இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் கொப்பு, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இது குறித்து கனாஸ்சிட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலையாளி  குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

கடந்த வாரம் சரத் கொப்புவின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கனாஸ்சிட்டி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த கேமராவில் பதிவான உருவத்தில் இருக்கும் நபரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த கண்காணிப்பு கேமராவில் இருக்கும் உருவத்தைப் போன்ற ஒருவரை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரைப் புலனாய்வு போலீஸார் தீவிரமாக கண்காணித்து விசாரணை நடத்தியதில், சரத் கொப்புவைக் கொலை செய்தவர் அந்த இளைஞர்தான் என்பது உறுதியானது.

இதையடுத்து, அந்த நபரைக் கைது செய்யும் முயற்சியில் போலீஸார் நேற்று ஈடுபட்டபோது, அவர் போலீஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்ப முயன்றார். அப்போது போலீஸாருக்கும், அந்த இளைஞருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார், 3 போலீஸாரும் காயமடைந்தனர் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து கனாஸ்சிட்டி போஸீல் தலைவர் ரிக் ஸ்மித் கூறுகையில், “ கனாஸ்சிட்டி ஹோட்டலில் இந்திய மாணவரைச் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞரைக் கண்டுபிடித்து அவரை காரில் போலீஸார் துரத்திச் சென்று கைது செய்ய முயன்றனர். ஆனால், போலீஸாரைப் பார்த்ததும் அந்த இளைஞர் தன்னுடைய காரில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது போலீஸாருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார். இதில் போலீஸாரும் காயமடைந்தனர். ஆனால், அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. அந்த இளைஞரிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த இளைஞருடன் காரில் பயணித்த மற்றொரு இளைஞர் தப்பி ஓடிவிட்டார். அவரையும் தேடி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

ஆனால், அந்த இளைஞர் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், பெயர் என்ன, வயது ஆகிய விவரங்களை கனாஸ் போலீஸார் வெளியிடவில்லை.

சரத் கொப்புவைக் கொன்ற மர்ம நபரை கனாஸ்சிட்டி போலீஸார் சுட்டுக்கொன்றதற்கு கனாஸ்சிட்டி நகர இந்திய மக்கள் அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய குடிமக்கள் அமைப்பின் தலைவர் ஜெகதீசன் சுப்பிரமணியன் கூறுகையில், ’’சரத் கொப்புவைக் கொலை செய்த அந்த நபரை போலீஸார் சுட்டுக்கொன்ற செய்தி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம், இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 போலீஸார் காயமடைந்திருப்பது வேதனையை அளிக்கிறது. அவர்கள் விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x