Published : 18 Jul 2018 06:19 PM
Last Updated : 18 Jul 2018 06:19 PM

பெரிய முடிவுகள் வர உள்ளன: புதினுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கருத்து

பெரிய முடிவுகள் வரவுள்ளன என ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. அதன்பின் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து ட்ரம்ப்பும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் புதினும் ட்ரம்பும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர்.

அதில் புதின், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா ஒருபோதும் தலையிட்டது இல்லை என்பதை மீண்டும் உறுதிபடக் கூறுகிறேன். என்னை ட்ரம்ப் நம்புகிறார். அவரை நான் நம்புகிறேன்” என்று  கூறியிருந்தார்.

ரஷ்ய அதிபர் புதினுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் ட்ரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்காவைக் கீழறிக்கிவிட்டது என ஜனநாயக கட்சியினர் அவரை குற்றம்சாட்டி இருந்தனர். மேலும் ட்ரம்ப் - புதின் சந்திப்பை அமெரிக்க ஊடகங்களும் விமர்சித்திருந்தன.

இந்த நிலையில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு குறித்த விமர்சனங்களுக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் புதினுடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு உளவுத்துறையில் உயர் பதவிகளில் உள்ள பலருக்குப் பிடித்திருந்தது. பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பு புதினும் நானும் பல முக்கிய ஆலோசனைகளை நடத்தினோம். எங்களது சந்திப்பை குத்துச்சண்டைப் போட்டியாக காண விரும்பிய வெறுப்பாளர்களை இது மிகவும் பாதித்துள்ளது. பெரிய முடிவுகள் வரவுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x