சட்டவிரோதமாக குடியேறிய​ 19 ஆயிரம் பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றம்

சட்டவிரோதமாக குடியேறிய​ 19 ஆயிரம் பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றம்

Published on

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய இந்திய ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் அதிரடி சோதனையை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை பிரிட்டன் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. அதுபோன்ற பணியை தற்போது பிரிட்டன் அரசும் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டறியும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் முதல் ஈடுபட்டு உள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களை கைது செய்து அவர்களது சொந்த நாட்டுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதுவரை 19 ஆயிரம் பேர் அவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரிட்டனில் பிரதமர் கேர் ஸ்டார்மர் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும் இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில், சட்டவிரோதமாக குடியேறிய அகதிகள் குறித்து, இந்திய உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கபேக்கள், வணிக வளாகங்கள், வாகனம் தூய்மை செய்யும் இடங்களில் பிரிட்டன் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

மேலும், அங்கு தங்கியுள்ள இந்தியர்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். இந்நிலையில், ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய ஓட்டலில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை நிகழ்ச்சி தொடரும் என்றும் பிரிட்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in