Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM

இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க இந்தியரின் ஆய்வில் தகவல்

இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் டீன்ஏஜ் இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர் அரவிந்த் பிள்ளை தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டது.

“1956 – 60-க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் பருவத்தில் குடிப்பழக்கத்தை தொடங்கியவர்கள் அளவு 19.5 சதவீதம். இதுவே 1981 - 86 காலகட்டத்தில் பிறந்தவர்களில் டீன்ஏஜ் வயதில் மதுப்பழக்த்துக்கு ஆளானவர்கள் அளவு 74.3 சதவீதமாக உயர்ந்துள்ளது” என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வுக்குழு இம்முடிவுக்கு வருவதற்கு, வடக்கு கோவாவில் நகர்புற மற்றும் கிராமப்புற பகுதியில் பரவலாக தேர்வு செய்யப்பட்ட 20 முதல் 49 வயது வரையிலான 2 ஆயிரம் பேரிடம் வினாப் பட்டியல் மூலம் விவரங்களை சேகரித்தது.எந்த வயதில் மது குடிக்கத் தொடங்கினீர்கள்?, எவ்வளவு குடிப்பீர்கள்?, குடிப்பழக்கத்தால் காயம் ஏற்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளை இக்குழு கேட்டுள்ளது.

மேலும் மற்றொரு கேள்விப்பட்டியல் மூலம் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்களின் உளவியல் பாதிப்புகளையும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மதுப் பழக்கமும் அதனால் ஏற்படும் தீங்குகளும் பொது சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இப்போக்கு அபாய அளவில் இருப்பதாகவும் அரவிந்த் பிள்ளை எச்சரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x