Published : 04 Feb 2025 01:22 AM
Last Updated : 04 Feb 2025 01:22 AM
சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் (2023-24) இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் கட்டுமானம், உள்கட்டமைப்பு, சேவைகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் பதிவுசெய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-24-ல் 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர் எண்ணிக்கை 2 லட்சம் அதிகரித்து, 26.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டை விட 10 சதவீத உயர்வு ஆகும். இதுபோல் நடப்பு நிதியாண்டிலும் (2024-25) இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இந்தியத் தூதர் சுகல் அஜாஸ் கான் கூறுகையில், “சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமுள்ள பாலமாக விளங்குகின்றனர். சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.
2030-ம் ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் எண்ணெய் அல்லாத வருவாயை அதிகரிப்பதை நோக்கி சவுதி அரசு நகர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தி, சுற்றுலா, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் வெளிநாட்டினர் உட்பட அதிக நிபுணர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபிய அரசின் தகாமோல் ஹோல்டிங் என்ற மனித வள நிறுவனத்துடன் இந்திய அரசு திறன் சரிபார்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்படி கடந்த 2022-ம் ஆண்டு முதல், இந்தியாவின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இந்திய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி வருகிறது.
இதனால் திறமையான ஆட்களை சவுதி அதிகாரிகள் பணியில் அமர்த்தி வருகின்றனர். மேலும் பணியமர்த்தும் செயல்முறையை நெறிப்படுத்திலும் பணியாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2019-ல் சவுதி அரேபியாவில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்களின் எண்ணிக்க 400 ஆக இருந்தது. இது 2023 ஆகஸ்டில் 3 ஆயிரமாக அதிகரித்து மொத்த முதலீடு 3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT