Published : 27 Jan 2025 05:06 AM
Last Updated : 27 Jan 2025 05:06 AM

இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டு வழங்க பைடன் விதித்த தடையை நீக்கினார் அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய பிறகு நிலைமை போராக மாறியது. காசா மீது இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை விநியோகம் செய்வதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்தார். ஏனெனில், சக்திவாய்ந்த அமெரிக்க வெடி குண்டுகள் பாலஸ்தீனத்தின் மீது வீசப்பட்டால், பொதுமக்கள் பாதிக்கக் கூடும் என்று அவர் தடை விதித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் பதவியேற்றார். அதன்பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவற்றில், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகள் அனுப்புவதற்கு பைடன் விதித்த தடையை நீக்கும்படி ராணுவத்துக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளாார். இத்தகவலை அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “நிறைய விஷயங்களுக்கு இஸ்ரேல் ஆர்டர் கொடுத்துள்ளது. அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளது. ஆனால், பைடன் அரசு அவற்றை அனுப்பி வைக்கவில்லை. தற்போது அவை அனுப்பி வைக்கப்படுகின்றன” என்று ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், முன்னாள் அதிபர் பைடன், தற்போதைய அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவருமே இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள்தான். எனினும், சக்திவாய்ந்த அதிக எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க பைடன் தடை விதித்தார்.

இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் கடந்த வாரம் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இரு தரப்பினரும் தங்கள் வசம் உள்ள பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் பிணைக் கைதிகளை பரஸ்பரம் விடுவித்து வருகின்றனர்.

முன்னதாக கடந்த 20-ம் தேதி அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பேசும்போது. "ஹமாஸ் தீவிரவாதிகளிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அவர்கள் அதிக விலை கொடுக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x