அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்!
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார்.

அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்றார்.

அவருடன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸும் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்கு பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது திட்டங்களை வகுத்து, தொடக்க உரையை நிகழ்த்த உள்ளார் ட்ரம்ப்.

இந்த விழாவில் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா என அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களோடு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸூகர்பெர்க் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் அங்கு கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே 2,20,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள்அரங்குக்கு மாற்றப்பட்டதால் அதில் 600 பேர் மட்டுமே பங்கேற்க முடிந்தது

அதனால் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை ட்ரமப் ஆதரவாளர்கள் பார்ப்பதற்கு கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரம்ப்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in