Published : 11 Jan 2025 05:05 PM
Last Updated : 11 Jan 2025 05:05 PM

சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் ‘மத ரீதியிலானவை’ அல்ல: வங்கதேச காவல் துறை விளக்கம்

டாக்கா: சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை என்றும், அவை மத ரீதியிலானவை அல்ல என்றும் வங்கதேச காவல் துறை விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த 2024 ஆகஸ்ட்டில் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அப்போது, அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இது தொடர்பாக வங்கதேச இந்து பவுத்த ஒற்றுமை கவுன்சில் அளித்த புகாரின் பேரில் வங்கதேச காவல் துறை ஓர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், "ஆகஸ்ட் 2024-ல் மொத்தம் 1,769 வகுப்புவாத தாக்குதல்கள் நடந்ததாக இந்து பவுத்த ஒற்றுமை கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான வழக்குகள் மத ரீதியிலானவை அல்ல; அரசியல் ரீதியிலானவை.

காவல் துறை விசாரணையில் 1,234 சம்பவங்கள் அரசியல் ரீதியிலானவை. 20 சம்பவங்கள் மத ரீதியிலானவை. குறைந்தது 161 குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கண்டறியப்பட்டது. வன்முறைக்கு இலக்கானதாகக் கூறப்படும் நபர்கள் மற்றும் அதிகாரிகளை காவல் துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். கவுன்சிலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்கள், நிறுவனங்கள் மற்றும் நபர்களையும் காவல் துறையினர் சந்தித்தனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் அடிப்படையில் வழக்கமான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான வழக்குகளில், தாக்குதல்கள் மத ரீதியில் நடத்தப்பட்டவை அல்ல; மாறாக, அவை அரசியல் ரீதியிலானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது" என வங்கதேச காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தி இந்து’ நாளிதழுடன் பகிரப்பட்ட அறிக்கையின்படி, குறைந்தது 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,769 குற்றச்சாட்டுகளில் 62 வழக்குகளை புகார்களின் தகுதியின் அடிப்படையில் போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்து பவுத்த ஒற்றுமை கவுன்சில் அளித்த குற்றச்சாட்டுகளின் பட்டியலை காவல் துறை சேகரித்து, பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் காவல் துறையில் புகார் அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

வகுப்புவாத வன்முறைக்கு எதிராக "பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை" பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் கொண்டிருப்பதாக சனிக்கிழமை (ஜன.11) அறிவித்தது. "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையின்படி, வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வங்கதேச அரசு உறுதியளித்துள்ளது. "மதம், நிறம், இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நாட்டில் மனித உரிமைகளை நிறுவுவதற்கு இடைக்கால அரசாங்கம் மிக உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கிறது" என்று காவல் துறை அறிக்கை கூறியுள்ளது.

சிறுபான்மை மத சமூகங்களுக்கு ஆதரவாக செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் வங்கதேசம் பல பெரிய பேரணிகளைக் கண்டது. வங்கதேசத்தில் இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த துறவி சின்மோய் கிருஷ்ணா தாஸ், வங்கதேசக் கொடியை அவமதித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். பல சந்தர்ப்பங்களில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அதுபற்றி காவல் துறை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x