

மேற்கு ஆப்பிரிக்காவில், எபோலா வைரஸ் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேளையில் நோய்க்கான சோதனை மருந்தை லைபீரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஏற்பாடு செய்து வருகிறது.
எபோலா வைரஸ் அபாயகரமாக பரவி வரும் ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா மற்றும் சீயேரா லியோனா ஆகிய நாடுகளில், இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோர் எண்ணிக்கை 1,013 ஆக உள்ளது.
இந்த நோயின் தாக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுகாதாரமான உணவு, தண்ணீர், மருந்து, போக்குவரத்து என அனைத்து வகையிலும் விலை உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது.
இதனிடையே நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்கிய செவிலியருக்கு எபோலா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் உபயோகிக்க பிரத்தியேகமான கையுறைகளை மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு, சீன அரசு வழங்கியுள்ளது.
சோதனை மருந்து வழங்குகிறது அமெரிக்கா
எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோர் லைபீரியாவில் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் தனியார் மருந்து நிறுவனம் இந்த நோய்க்கான சோதனை மருந்தை கண்டுபிடித்துள்ளது.
நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது, 2 அமெரிக்கர்கள், எபோலா நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அந்த பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் சற்று குணமாகி வருவதாக அமெரிக்க சுகாதார மையம் உறுதி செய்தது.
எனவே, இந்த சோதனை மருந்தை, வழங்கும்படி அமெரிக்காவிடம் லைபீரியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பரிசோதனைக்குரிய அந்த மருந்து இந்த வாரம் லைபீரியாவுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை லைபீரியா அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆப்ப்பிரிக்காவின் கினியா நாட்டு கிராமத்தில் தொடங்கி சியர்ரா லியோன் நாட்டிற்கு பரவிய இந்த வைரஸ் லைபீரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலும் திடர்ந்து தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நோய்க்கு தகுந்த மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பலி எண்ணிக்கை இந்த நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.