Last Updated : 05 Jul, 2018 03:24 PM

 

Published : 05 Jul 2018 03:24 PM
Last Updated : 05 Jul 2018 03:24 PM

அச்சுறுத்தும் மழை; மீட்கப்படுவார்களா தாய்லாந்து சிறுவர்கள்?

தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்டுள்ள கால்பந்து அணி சிறுவர்களை மீட்பதற்கு மழை அச்சுறுத்தலாக இருந்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார். ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

இவர்களை  அணி நிர்வாகம் தேடியுள்ளது. பின்னர், தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பிரிட்டிஷ் போன்ற சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு  உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

10 நாட்களுக்குப் பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும்  இருக்கும் இடத்தை  திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிறுவர்களை மீட்க  மீட்புப் பணி நடந்து வருகிறது.

இந்த  நிலையில் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குகையிலிருந்து தண்ணீரை வெளியே எடுக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒருமணி நேரத்துக்கு 1 செ.மீ. தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதால் தற்போது மீண்டும் தண்ணீர் உயரும் நிலை ஏற்படலாம் என்று மீட்புப் படையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மீட்புப் படை வீரர் ஒருவர் கூறும்போது, ''எங்களது பெரிய கவலையே மழை தான். ஒருவேளை மழை பெய்தால் எங்களுக்கு எவ்வளவு மணி நேரம் தேவைப்படும் என்று நாங்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். குகையில் உள்ள சிறுவர்களுக்கு தொடர்ந்து உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

சிறுவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் என்று அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x