கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு: 10 சதவீதம் ஊழியர்கள் வேலையை இழக்கின்றனர்

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு: 10 சதவீதம் ஊழியர்கள் வேலையை இழக்கின்றனர்
Updated on
1 min read

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் வேலையை இழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

இன்றைய நாட்களில் கூகுள் இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம் கூகுள் செய்து பார்ப்பது வழக்கமாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்டு கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப் போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

மேலாளர், இயக்குநர், துணைத்தலைவர் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “நிறுவனத்தின் செயல்திறனை இரட்டிப்பாக மாற்றுவதற்காக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. நிர்வாகப் பிரிவில் உள்ள சிலர் ஆட்குறைப்பு செய்யப்பட்டு அனுப்பப்படவுள்ளனர். சிலரது பணிநிலை வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறது” என்றார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் 12 ஆயிரம் ஊழியர்களை நீக்கியது. அதைத் தொடர்ந்து தற்போது நிர்வாகப் பிரிவில் உள்ள 10 சதவீதம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் 4 முறை ஆட்குறைப்பு பணியை கூகுள் நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in