பத்திரிகையாளரை மீட்க முயன்று தோற்ற அமெரிக்க ராணுவம்

பத்திரிகையாளரை மீட்க முயன்று தோற்ற அமெரிக்க ராணுவம்
Updated on
1 min read

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே உள்ளிட்ட பணயக் கைதிகளை மீட்க, அமெரிக்க ராணுவம் ரகசிய நடவடிக்கையில் இறங்கி தோல்வியுற்றது தற்போது தெரியவந்துள்ளது.

சிரியாவில், அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே உள்பட பல அமெரிக்கர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறை பிடித்தனர். அவர்களை மீட்க, சிரியாவுக்கு சிறப்பு ராணுவப் படையை அமெரிக்கா அனுப்பியது. ஆனால், அம்முயற்சியில் அமெரிக்க சிறப்பு ராணுவப் படை தோல்வியுற்றது.

ரகசிய மீட்பு முயற்சியில் இறங்கியதை அமெரிக்க அதிபர் மாளிகை மற்றும் ராணுவத் தலைமையகமான பென்டகன் புதன்கிழமை ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க பணயக் கைதிகளில் ஜேம்ஸ் போலேவும் ஒருவரா என்பதை அமெரிக்க அதிபர் மாளிகை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அவரும் ஒருவர்தான் என பல்வேறு தரப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏராளமான அமெரிக்க ராணுவ வீரர்கள் அந்த ரகசிய நடவடிக்கையில் இறங்கினர். அதில் ஒரு ராணுவ வீரர், தீவிரவாதிகளுடனான சண்டையில் காயமடைந்தார் என தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பென்டகன் செய்தித் துறை செயலர் ஜான் கிர்பி கூறியதாவது: துரதிருஷ்ட வசமாக அந்நடவடிக்கை தோல்வியுற்றது. ராணுவ வீரர்கள் எந்த இடத்தை இலக்காகக் கொண்டு செயல்பட்டார்களோ அங்கு பணயக் கைதிகள் இல்லை. ராணுவத்தின் மீட்பு நடவடிக்கைத் திறன் பற்றிய விஷயங்கள் பாதுகாக்கப்படவேண்டியவை என்பதால், மேலதிக விவரங்களை அளிக்க முடியாது” என்றார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படை துணைத் தலைவர் லிஸா மொனாக்கோ கூறும்போது, “இந்த ரகசிய நடவடிக்கை அதிபர் ஒபாமாவின் அனுமதியின் பேரில் மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in