

பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு முன்னர் அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக இருப்பதாக தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாதக் கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
மொத்தமுள்ள 342 இடங்களில் 270 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பிடிஐ 117 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நவாஸ் கட்சி 62 இடங்களிலும், பிபிபி கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கான 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் சில கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் சிறிய கட்சிகளின் ஆதரவுகள் மற்று சுயேட்சைகள் ஆதரவை பெற்றும் வரும் வாரத்தில் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படம், ஆகஸ்ட் 14 -ம் தேதிக்கு முன்னதாக பிரதமராக இம்ரான் பதவி ஏற்பார் என்று தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் நேமுல் ஹவக் கூறும்போது, " நாங்கள் தொடர்ந்து சுயட்சி வேட்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள்” என்றார்.