நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மிஷேல் தோல்வி: மூன்றே மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

தோல்வியை ஏற்று கையெடுத்து கும்பிடும் பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியர்
தோல்வியை ஏற்று கையெடுத்து கும்பிடும் பிரான்ஸ் பிரதமர் மிஷேல் பார்னியர்
Updated on
1 min read

பாரிஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், பிரதமரான மூன்றே மாதத்தில் பதவியை இழந்தார் மிஷேல் பார்னியர். பிரான்ஸ் வரலாற்றில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு பிரதமரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பார்னியர் 91 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்துள்ளார். அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் இத்தகைய குறுகிய காலத்தில் பிரதமர் பதவியை இழந்தவராக மிஷேல் பார்னியர் அறியப்படுகிறார்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில், மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றது. இந்தக் கட்சிக்கு அதிபரின் ஆதரவும் கிட்டியது. இருந்தாலும் மைனாரிட்டி அரசாகத்தான் அக்கட்சி ஆட்சியமைக்க முடிந்தது. இதனையடுத்து பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷேல் பார்னியர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மிஷேர் பார்னியர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றன.

சர்ச்சைக்கு வழிவகுத்த பட்ஜெட்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியேர் 2025-ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் மேக்ரோனின் ஆதரவு இருப்பதால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட்டை எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என மிஷேல் பார்னியேர் கூறியிருந்தார்.

இதனால், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியேருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்தார். மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த தோல்வியைத் தொடர்ந்து தமது பிரதமர் பதவியை மிஷேல் பார்னியேர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து அதிபரும் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in