நைஜீரியாவில் படகு விபத்து: 27 பேர் பலி; 100-க்கும் அதிகமானோர் மாயம்

பிரதிநிதித்துவப் படம் - கடந்த 2022-ல் நடந்த நைஜீரிய படகு விபத்து
பிரதிநிதித்துவப் படம் - கடந்த 2022-ல் நடந்த நைஜீரிய படகு விபத்து
Updated on
1 min read

லாகோஸ்: நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் நேற்று இந்தப் படகு விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்தபோது படகில் 200-க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் கோகி பகுதியில் இருந்து நைகர் நகரில் உள்ள உணவுச் சந்தைக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் இதுவரை 27 சடலங்களை மீட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். விபத்து நடந்து 12 மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் கூட மாயமானவர்களில் யாரும் உயிருடன் கிடைக்கவில்லை என்று கோகி மாவட்ட பேரிடர் சேவைகள் துறை செய்தித் தொடர்பாளர் சாண்ட்ரா மூஸா தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தை அரசுத் தரப்பு உறுதி செய்யாவிட்டாலும் கூட உள்ளூர் ஊடகங்கள் படகில் அதிகளவில் மக்கள் ஏற்றப்பட்டதாலேயே விபத்து நடந்த்து எனத் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் சரியான சாலை வசதிகள் இல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. அப்பகுதிகளில் எல்லாம் இன்றளவும் படகு சவாரி தான் ஒரே போக்குவரத்து வசதியாக இருக்கிறது. இந்நிலையில் அந்தப் படகுகளில் அதிகளவில் மக்களை ஏற்றுவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. கடந்த அக்டோபர் 3-ம் தேதி நடந்த படகு விபத்தில் 60 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in