வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க டாக்கா ஐகோர்ட் மறுப்பு

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க டாக்கா ஐகோர்ட் மறுப்பு
Updated on
1 min read

டாக்கா: வங்க தேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க கோரும் மனுவை டாக்கா உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து வங்கதேச இஸ்கான் அமைப்பு தலைமையில் தொடர் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இந்த அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த திங்கட்கிழமை தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இது, இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கைது நடவடிக்கைக்கு எதிராக சிட்டகாங் நீதிமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில் சைபுல் இஸ்லாம் அலி என்ற வழக்கறிஞர் கொல்லப்பட்டார். இந்த வன்முறையை தொடர்ந்து வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என டாக்கா உயர் நீதிமன்ற அமர்வு முன் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.

இதையடுத்து, இஸ்கான் அமைப்பின் சமீபத்திய செயல்பாடுகள் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு அட்டர்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஃபரா மகபூப், தேபாசிஷ் ராய் சவுத்ரி அமர்வு ஆகியோரை கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரத்தில் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்கான் செல்பாடுகள் மற்றும் வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் கொலை தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகளில் இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதிலும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பதில் அரசு கவனமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in