Published : 03 Jun 2018 08:27 AM
Last Updated : 03 Jun 2018 08:27 AM

உலக மசாலா: நவீன விமானம் கேட்கும் இறை ஊழியம்!

மெரிக்காவின் மிகவும் பிரபலமான மதபோதகர்களில் ஒருவர் ஜெஸ்ஸி டுப்லான்ட்டிஸ். பிரசங்கங்களுக்காக பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கித் தருமாறு, பக்தர்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த விமானத்தின் விலை சுமார் 361 கோடி ரூபாய்! லூசியானாவில் உள்ள தேவாலயத்தில் செல்வாக்கு மிக்கப் பதவியில் இருக்கும் இவர், ஏற்கெனவே பிரைவேட் ஜெட் விமானங்களைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இப்போது மூன்றாவது விமானத்தை வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார். 68 வயது ஜெஸ்ஸி, “மதபோதகர்களுக்கு ஏன் தனி விமானங்கள் என்று பலரும் கேட்கிறார்கள். ஃபால்கன் 7எக்ஸ் விமானம் மூலம் உலகம் முழுவதும் நிற்காமல் பறக்கலாம். இதனால் எரிபொருள் கணிசமாக மிச்சமாகும், இறைவனின் புகழும் பரவும் என்பதைப் பார்க்கும்போது பக்தர்கள் தாராளமாக நன்கொடை அளிக்கலாம். இது என் தனிப்பட்ட விருப்பம் அல்ல. 1978-ம் ஆண்டு இறைவன் என்னை விமானம் வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டார். அதன் பிறகே விமானம் வாங்கும் எண்ணம் வந்தது. இறைவனின் திருப்பணியில் நீங்களும் ஒரு அங்கமாக வேண்டும் என்றால் நன்கொடை அளியுங்கள். இதில் எந்த நிர்பந்தமும் இல்லை. இறைவனே இன்று பூமியில் தோன்றினாலும் கழுதையில் பயணம் செய்ய விரும்பமாட்டார். விமானத்தின் மூலம்தான் உலகை விரைவாகச் சுற்றி வர முடியும் என்பார்” என்று வீடியோவில் மக்களின் மனதைத் தொடும் விதத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதற்கு முன் வாங்கப்பட்ட 2 ஜெட் விமானங்களையும் பக்தர்களின் நன்கொடையில்தான் வாங்கியிருக்கிறார். ஜெஸ்ஸியின் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இறைவனின் பெயரைச் சொல்லி கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிப்பதைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இறைவனுக்குத் தொண்டு செய்யும் மதபோதகர், தனி விமானத்தில் செல்வதே சரி என்று சொல்லி லட்சக்கணக்கில் நன்கொடை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

நவீன விமானம் கேட்கும் இறை ஊழியம்!

த்தாலியின் மிலன் நகரில் வசிக்கும் லூகா, தன்னுடைய பெண் குழந்தைக்கு ‘ப்ளூ’ என்று பெயரிட்டிருந்தார். 18 மாதக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழும் பாஸ்போர்ட்டும் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது பெண் குழந்தையின் பெயராக இல்லை என்பதால், வேறு ஒரு பெயரை வைக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறது நீதிமன்றம். இத்தாலியில் ப்ளூ என்ற பெயர் பெண் பெயராகத்தான் இதுவரை இருந்து வந்தது. திடீரென்று இந்தப் பெயரை மாற்றச் சொன்னதும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். “அடுத்த முறை நீதிமன்றம் செல்வதற்குள் நாங்கள் பெயர் மாற்றவில்லை என்றால், நீதிமன்றமே ஒரு பெயரைச் சூட்டிவிடும் என்று சொல்லியிருக்கிறது. சென்ற முறை நாங்கள் நீதிமன்றத்தில் இருந்தபோது எங்கள் கண் முன்னே ‘ப்ளூ’ என்ற ஒரு பெண் குழந்தையின் பெயரை நீதிபதி மறுப்புச் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார். எங்களை மட்டும் ஏன் மாற்றச் சொல்கிறார் என்று புரியவில்லை. ஒரு காலத்தில் செலஸ்ட் என்ற பெயர் ஆணுக்கு உரியதாக இருந்தது. ஆனால் இன்றோ அது பெண்ணின் பெயராக மாறிவிட்டது” என்கிறார் ப்ளூவின் அப்பா லூகா.

பெயரில் கூட நீதிமன்ற தலையீடா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x