நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல்
Updated on
1 min read

சியோல்: தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமை யிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் கூறியிருப்பதாவது: நிலத்தடி நீர் குறைவு காரணமாக, பூமியின் துருவம் சுமார் 80 செ.மீ கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது. ஆராய்ச்சி மேற்கொண்ட காலத்தில் பூமியிலிருந்து 2,150 ஜிகாடன்கள் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. பூமியிலிருந்து நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்டதால், கடல் மட்டமும் 0.24 அங்குலம் உயர்ந்து, பூமியின் நிறை விநியோகத்தில் மாற்றம் ஏற்பட்டு அதன் சுழற்சி அச்சு ஆண்டுக்கு 4.36 செ.மீ சாய்வதற்கு வழிவகுக்கிறது. தற்போது அது 31.5 அங்குலம் சாய்ந்துள்ளது. நிலத்தடி நீர், கடலுக்கு மீண்டும் செல்வது, துருவ இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பூமியின் அச்சில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால், வானிலையில் உடனடி பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால், நீண்டகால பாதிப்பு ஏற்படலாம். பூமியின் துருவ இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால், நீடித்த நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in