

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்தித்தனர். இதில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு சீனா அனுமதி அளித்துள்ளதோடு, வெள்ளக் காலங்களில் பிரம்மபுத்திரா நதி நீர் நிலவர தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 9-ம் தேதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மே 15ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை சீனத் தரப்பிலிருந்து பிரம்மபுத்திரா நதி நீர் அளவு உள்ளிட்ட தகவல்களை இந்தியாவுடன் அந்த நாடு பகிர்ந்து கொள்ளும். அதே போல் வெள்ள அபாயம் இல்லாத காலக்கட்டங்களிலும் பிரம்மபுத்திரா நதி நீர்மட்டம் ‘இருதரப்பும் ஒப்புக் கொண்ட’ அளவுகளை மீறும்போது அந்தத் தரவுகளையும் சீன அளிக்க புதிய ஒப்பந்தங்களின் படி ஒப்புக் கொண்டுள்ளது.
அதே போல் இந்தியாவிலிருந்து அனைத்து வகை அரிசிகளையும் ஏற்றுமதி செய்யும் உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா தொடர்ந்து வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்காக சீனாவிடம் வலியுறுத்தியே வந்துள்ளது இந்த உச்சிமாநாட்டில் கை கூடியுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
பிடிஐ தகவல்கள்:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இருதரப்புப் பேச்சு வார்த்தைகளில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வரைவு மாதிரிகளை உருவாக்க பேச்சு வார்த்தை நடத்தினர். வூஹானில் இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவதற்கான பரிசீலனைகளையும் இருவரும் மேற்கொண்டனர்.
மோடி, ஜின்பிங் இடையேயான இந்தச் சந்திப்பு இருதரப்பு உறவுகளில் இருந்து வந்த சிக்கல்கள், இடுக்கு முடுக்குகளைக் களைவதாக இருக்கும் என்று அயலுறவு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
டோக்ளாம் முதல் சிலபல சில்லரைப் பிரச்சினைகளில் இந்திய-சீன உறவுகளுக்கிடையே பெரிய பிரச்சினைகள் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, தற்போது இந்தச் சந்திப்பு மற்றும் உடன்படிக்கைகள் மூலம் வலுவான நேர்மறையான இருதரப்பு உறவுகளுக்கு வித்திடும் என்று இருதரப்பினருமே நம்பிக்கை வைத்துள்ளனர்.
வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமாரும் சந்திப்பு மிகவும் நல்லபடியாகவும் எதிர்காலத்தை நோக்கியதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.