இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
Updated on
1 min read

கொழும்பு: இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோதும், புதிய அதிபா் அநுர குமார திசாநாயக நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் வேண்டிய நிலையில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அசாத்திய வெற்றி பெற்றது.

இதையொட்டி, இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். அதிபர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், பல அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். கடந்த மூன்று மாதங்களாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமராக ஹரிணி அமரசூர்ய இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே.

21 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையில், போக்குவரத்து அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன், வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜிதா ஹெராத் உள்ளிட்டோர் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். அதோடு, உயர்கல்வி துறை அமைச்சராகவும் ஹரிணி பொறுப்பேற்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in