எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய 200 ஆண்டு பழமையான 'தி கார்டியன்’ நாளிதழ் - நச்சுக் கருத்துகளை பரப்புவதாக குற்றச்சாட்டு

எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய 200 ஆண்டு பழமையான 'தி கார்டியன்’ நாளிதழ் - நச்சுக் கருத்துகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

லண்டன்: 200 ஆண்டுகாலம் பழமையான பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இனி எக்ஸ் தளத்தில் எதையும் பதிவிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எக்ஸ் தளத்தின் வாயிலான அதன் சிஇஓ எலான் மக்ஸ் தொடர்ந்து நச்சு கருத்துகளை பரப்பிவந்ததே இந்த முடிவுக்கு காரணம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் தளத்தை ஜாக் டார்ஸியிடமிருந்து கடந்த 2022ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பெரும் தொகைக்கு வாங்கினார். பேஸ்புக்-க்கு அடுத்து உலகின் மிக முக்கிய சமூக ஊடகமாக இருந்து வந்த ட்விட்டர், எலான் மஸ்க்கின் வருகைக்கு பிறகு எதிர்மறை கருத்துக்கள் அதிகம் புழங்கும் இடமாக மாறியது. அதன் பெயரும் ‘எக்ஸ்’ என்று மாற்றப்பட்டது. எலான் மஸ்க்கே எக்ஸ் தளத்தின் வழியே தனக்கு வேண்டாதவர்களை மிகவும் கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கை நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் உச்சம் தொட்டது. கருப்பின மக்கள், பெண்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலர் மீதும் வெறுப்பை கக்கும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வந்தார். டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றதற்கு எலான் மஸ்க்கும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் லண்டனில் பாரம்பரியமிக்க ‘தி கார்டியன்’ நாளிதழ் இனிவரும் காலங்களில் எக்ஸ் தளத்தில் எந்தவொரு பதிவும் பகிரப்படாது என்றும் தங்கள் செய்தியாளர்களின் பயன்பாட்டுக்காக தங்களின் கணக்கு மட்டும் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’தி கார்டியன்’ நாளிதழுக்கு சொந்தமாக 30க்கு மேற்பட்ட கணக்குகள் உள்ளன. இவற்றை சுமார் 2 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்தும் ‘தி கார்டியன்’ கட்டுரைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 1821ஆம் ஆண்டு லண்டனில் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ் பின்னர் 1959ஆம் ஆண்டு ‘தி கார்டியன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in