Published : 08 Jun 2018 08:36 AM
Last Updated : 08 Jun 2018 08:36 AM

ட்ரம்ப் - கிம் சந்திக்க ஏற்பாடுகள் தயார்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பெருமிதம்

‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன ’’ என்று சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஒருவர் நாட்டை ஒருவர் அழித்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து அணுஆயுத ஒழிப்பு குறித்து பேச ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் செய்து வருகிறது. இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் கூறியதாவது:

அதிபர்கள் ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்தச் சந்திப்பில் நல்லதொரு முடிவு கிட்டும் என்று நம்புகிறோம். அதேநேரத்தில் ஒரே சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் நிலவும் எல்லா சிக்கல்களும் அவிழ்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்தச் சந்திப்புக்காக நாங்களாக யாரையும் அழைக்கவில்லை. முதலில் அவர்கள்தான் எங்களைத் தொடர்பு கொண்டார்கள். முதலில் அமெரிக்காதான் எங்களைத் தொடர்பு கொண்டது. சிங்கப்பூர்தான் சிறந்த இடம் என்று அமெரிக்காவும் வடகொரியாவும் முடிவு செய்துள்ளன. இதற்காக சிங்கப்பூர் மக்கள் பெருமை கொள்ள வேண்டும்.

நாங்கள் நடுநிலையானவர்கள், நம்பிக்கையானவர்கள், பாதுகாப்பான நாடு என்பதால் சிங்கப்பூரை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்களும் உலக அமைதிக்காக எங்கள் பங்கை செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காக ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளோம். அமெரிக்க அதிகாரிகளுடன் சிங்கப்பூர் அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இவ்வாறு சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

அதிபர்கள் ட்ரம்ப் - கிம் இருவரும் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் சந்திக்க உள்ளனர். இந்தத் தீவு பிரபலமான சுற்றுலா தலமாகும்.

இந்தத் தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேலும், சிங்கப்பூரில் உள்ள ஷாங்கிரி-லா ஓட்டலில் ட்ரம்ப்பும் செயின்ட் ரெஜிஸ் ஓட்டலில் கிம் ஜாங் உன்னும் தங்குகின்றனர். இந்த 3 இடங்களிலும் ராணுவ வீரர்கள் உட்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சிங்கப்பூர் செய்துள்ளது.

முன்னதாக சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அமெரிக்கா சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி திரும்பினர். இந் நிலையில், வடகொரியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அங்கு வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோவைச் சந்தித்து ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்து கிறார்.

இரு நாட்டு அதிபர்கள் சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் உலகின் பல நாடுகளில் இருந்தும் 2,500-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் சிங்கப்பூர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x