

ஆம்ஸ்டர்டம்: ஆம்ஸ்டர்டமில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு இரண்டு மீட்பு விமானங்களை அனுப்பி வைக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்டர்டமில் கால்பந்து போட்டியில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தாக செய்திகள் வெளியான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் டச்சு நகரில் உள்ள இஸ்ரேலியர்கள் வெளியே வராமல் ஹோட்டல் அறைக்குள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது இரண்டாவது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில், "கால்பந்து விளையாட்டைக் காணச் சென்ற ரசிகர்கள், யூத வெறுப்பு காரணமாக வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்கள் யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் என்ற காரணத்தால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் கூறும்போது, "கால்பந்து விளையாட்டு முடிந்ததும் பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்கார்கள் ஜோகன் க்ரூஃப் மைதானத்தை அடைய முயற்சித்ததைத் தொடர்ந்து 57 பேர் கைது செய்யப்பட்டனர். எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். ஆனாலும் இரவில் நகரின் பல்வேறு பகுதிகள் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்றனர்.
இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், "பாரம்பரியமாக யூத அணியாக அடையாளம் காணப்பட்டு வரும் அஜக்ஸ் ஆம்ஸ்டர்டம் கால்பந்து அணி, மெக்கபி டெல் அவிவ் அணியை 5 - 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் குடிமக்களை மீட்க, டச்சு அரசுடன் இணைந்து உடனடியாக மீட்புக் குழுவை அனுப்ப இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கைக்காக சரக்கு விமானம் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் மீட்பு மற்றும் மருத்துவக் குழுவும் செல்கிறது" என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக விமான நிலையத்துக்கு வர டச்சு அரசு உதவுமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இதனை நெதர்லாந்து அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் கஸ்பர் வேல்த்காம்ப்பிடம் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அரசின் இந்த அறிக்கைகளுக்கு டச்சு அரசின் வெளியுறவுத் துறை உடனடியாக எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில், டச்சு அரசின் பெரிய கட்சியும், இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதியுமான கீர்ட் வில்டர்ஸ் ஆம்ஸ்டர்டம் தாக்குதலைக் கண்டித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "நெதர்லாந்தில் இப்படி நடந்ததற்காக வெட்கப்படுகிறேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.