

வடகொரியாவைபோல் ஈரான் மீதும் அணுஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த பிப்ரவரியில் சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றது.
அதன்பின் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்துப் பேசினர். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க அதிபர் கிம் விருப்பம் தெரிவித்தார். இதனை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார்.
சில குழப்பங்களுக்குப் பிறகு இரு தலைவர்களும் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரிலுள்ள கேபெல்லா ஓட்டலில் பங்கேற்ற ட்ரம்ப் - கிம் ஆகியோர் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மேலும் இந்த சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிப்பதாக வடகொரியா உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, "அணுஆயுதங்களை கொரிய தீபகற்ப பகுதியிலிருந்து அழிப்பதற்கு இது முக்கிய படியாகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதே மாதிரியான கடுமையான நடவடிக்கைகளை ஈரான் மீது எடுக்க வேண்டும். மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் அதன் ஆக்கிரப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.