Published : 13 Jun 2018 09:19 AM
Last Updated : 13 Jun 2018 09:19 AM

வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும்; அணு ஆயுத ஒழிப்பு முயற்சியின் முதல் படி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - கிம் சந்திப்பு குறித்து உலக தலைவர்கள் கருத்து

டொனால்டு ட்ரம்ப், கிம் சந்திப்பு அணு ஆயுத ஒழிப்பின் முதல் படி என ஜப்பான் தெரிவித்துள்ள நிலையில், ஐ.நா. தீர்மானத்துக்கு உடன்பட்டு நடந்து கொண்டால் வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று சீனா பரிந்துரை செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டது. இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக உலக தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறும்போது, “கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவும் உறவை புதுப்பிக்கவும் ட்ரம்ப், கிம் சந்திப்பு உதவும். இதன்மூலம் புதிய அத்தியாயம் எழுதப்படும். இதில் பல சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல மாட்டோம்” என்றார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ட்ரம்புக்கும் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேபோல், அவர்களுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம், அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையின் முதல் படி என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பேச்சுவார்த்தை மூலமாக கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி ஏற்படும் என ஜப்பான் நம்புகிறது” என்றார்.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கிம் ஜாங் உன்னும் டொனால்டு ட்ரம்பும் சந்தித்து அணு ஆயுத ஒழிப்பு குறித்தும் கொரிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்கத்தக்கது. இந்த பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தி, ஐ.நா. தீர்மானத்துக்கு உடன்பட்டு நடந்து கொண்டால் வடகொரியா மீதான பொருளாதார தடையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நீக்க வேண்டும்” என்றார்.

எச்சரிக்கை வேண்டும்

ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் முகமது பாகர் நொபக்த் நேற்று கூறும்போது, “ட்ரம்ப் எந்த நேரத்திலும் ஒப்பந்தத்தை செய்து விடுவார். எனவே, அவரிடம் கிம் ஜாங் உன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலை எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார். இதை நினைவுபடுத்தும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பங்கேற்றுவிட்டு, கிம்மை சந்திக்க சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. - ஏபி, ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x