

கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் லிபியாவின் தலைநகரான திரிபோலியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், நூரநாட்டைச் சேர்ந்த சாலமன் டேனியல் (59) கடந்த 10 ஆண்டுகளாக லிபியாவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்குத் திரும்ப அவர் முடிவு செய்தார். அண்மையில் தனது குடும்பத்தாரிடம் பேசிய அவர், இந்த வாரத்தில் இந்தியா திரும்ப உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பணிபுரியும் இடத்தில் இருந்து தங்கியிருக்கும் குடியிருப்புக்கு அவர் திரும்பிய போது கிளர்ச்சியாளர்கள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லிபியாவை விட்டு வெளியேறிய கேரளாவைச் சேர்ந்த 50 நர்ஸ்கள் செவ்வாய்க்கிழமை இந்தியா வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை வழியாக லிபியாவிலிருந்து துனிஸ் நகரம் வந்த அவர்கள் அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்புகிறார்கள்.