

பிரிட்டனில் உள்ள பிளென்காத்ரா மலைப்பகுதியை வாங்க தான் முயற்சித்து வருவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று எஃகு தொழில் அதிபரும், லண்டன் வாழ் இந்தியருமான லட்சுமி மிட்டல் தெரிவித்துள்ளார்.
கும்ப்பிரியா பகுதியில் உள்ள லேக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிளென்காத்ரா மலையை விற்பனை செய்யப்போவதாக, அதன் உரிமையாளரான லான்ஸ்டேலின் பிரபு ஹுக் லாவ்தர் அறிவிப்பு வெளியிட்டார். அரசுக்கு வரி செலுத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காக, தனது சொத்தை விற்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2,850 அடி உயரமுள்ள அந்த மலையின் விலை 1.75 மில்லியன் பவுண்ட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பகுதி 2,676 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதை விற்பனை செய்யும் பணியை எச் அண்டு எச் நிலம் மற்றும் சொத்து பரிவர்த்தனை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
பிளென்காத்ரா மலைப் பகுதியை வாங்க லட்சுமி மிட்டல் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியானது. மலையை வெளிநபர்களுக்கு விற்பதற்கு அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து லட்சுமி மிட்டல் திங்கள்கிழமை கூறியதாவது: “பிளென்காத்ரா மலைப்பகுதியை வாங்கும் எண்ணமே எனக்கு இல்லை. அவ்வாறு இருக்கும்போது, எப்படி இதுபோன்ற செய்தி வெளியானது என்று தெரியவில்லை. அந்த மலையை விலைக்கு வாங்குவதற்கு நான் முயற்சிக்கவில்லை” என்றார்.