

எபோலா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை, தற்போதைய நிலையில் 1,350 ஆக அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் அபாயகரமாக பரவி வரும் ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா மற்றும் சீயேரா லியோனா ஆகிய நாடுகளில், இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தற்போதைய நிலையில், எபோலா வைரஸ் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,350 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.
இதில், அதிக அளவாக லைபீரியாவில் மட்டும் 576 உயிரிழந்துள்ளனர். இங்கு எபோலா வைரஸ் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நோய் கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில், லைபீரியாவில் சிக்கல் நீடிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்தாக, கினியாவில் 396 பேரும், சீயேரா லியோனாவில் 374 பேரும், நைஜீரியாவில் 4 பேரும் பலியாகியதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எபோலாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 2,473- ஆக உயர்ந்துள்ளது. இதில், லைபீரியாவில் 972 பேருக்கும், சீயேரா லியோனில் 907 பேருக்கும், கினியாவில் 579 பேருக்கும், நைஜீரியாவில் 15 பேருக்கும் எபோலா நோய் இருப்பது உறுதியாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.