பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - 20 பேர் பலி; 7 பேர் படுகாயம்

குறியீட்டுப் படம்
குறியீட்டுப் படம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இன்று (அக். 11) அதிகாலை நடந்த தாக்குதலில் 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர்.

பலூசிஸ்தானின் டுகி பகுதியில் உள்ள ஒரு சிறிய தனியார் நிலக்கரி சுரங்கத்தில் ஆயுதமேந்திய நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக டுகி காவல்நிலைய அதிகாரி ஹுமாயுன் கான் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆயுதமேந்திய குழு ஒன்று கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி டுகி பகுதியில் உள்ள ஜுனைட் நிலக்கரி நிறுவன சுரங்கங்களை அதிகாலையில் தாக்கியது. சுரங்கங்கள் மீது ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை அவர்கள் வீசினர்" என்று கூறினார்.

டுகியில் உள்ள மருத்துவர் ஜோஹர் கான் ஷாதிசாய், “மாவட்ட மருத்துவமனையில் இதுவரை 20 உடல்கள் வந்துள்ளன. காயமடைந்த நிலையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

துகி மாவட்ட கவுன்சில் தலைவர் கைருல்லா நசீர், இந்த தாக்குதலில் கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பிற நவீன ஆயுதங்களை குற்றவாளிகள் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் எல்லைப் படை குழுக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாகவும் நசீர் உறுதிப்படுத்தி உள்ளார்.

டுகி துணை ஆணையர் கலீமுல்லா காக்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பலியானவர்களில் 17 பேர் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்களிலும் 3 பேர் ஆப்கனைச் சேர்ந்தவர்கள்" என குறிப்பிட்டார்.

அக்டோபர் 15-16 வரை இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டை நடத்த பாகிஸ்தான் தயாராகி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எஸ்சிஓ உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உயர்மட்ட சீன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in