Published : 13 Jun 2018 09:18 AM
Last Updated : 13 Jun 2018 09:18 AM
பி
ரபலமானவர்களைப்போல் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் உருவத்தை மாற்றிக்கொள்வதற்குப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு சிலரே அதில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த ஹி செங்ஸி. சீனாவின் மிகப் பிரபலமானவர் ஃபான் பிங்பிங். நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர், ஃபேஷன் ஐகான் போன்ற பல அடையாளங்கள் இவருக்கு உண்டு. எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று, சீனர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார். ஏராளமான பெண்களின் கனவு இவரைப்போல் உருவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான். 23 வயது ஹி செங்ஸியைப் பார்ப்பவர்கள், ஃபான் பிங்பிங்போல இருப்பதாகச் சொல்வார்கள். அப்படித்தான் தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஆசை இவருக்கு வந்தது. 8 ஆண்டுகள் கடினமான காலகட்டம். ஏராளமான பணத்தைச் செலவு செய்து பல்வேறு உறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்துகொண்டார்.
அச்சு அசலாக ஃபான் பிங்பிங் போன்றே காட்சியளித்தார். பார்ப்பவர்கள் பிங்பிங் என்று நினைத்துப் பேச ஆரம்பித்தார்கள். ஆட்டோகிராப் கேட்டார்கள். இந்த நாளுக்காக இவ்வளவு காலமும் காத்திருந்த ஹி செங்ஸியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனத் தொலைக்காட்சி ஒன்றில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். அப்போதுதான் பிங்பிங் போன்று இன்னொரு பெண்ணா என்று சீனர்கள் வியந்து போனார்கள். சர்வதேச செய்தித்தாள்களில் ஹி செங்ஷி இடம் பிடித்தார். அந்தப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார். ஆனாலும் வைல்ட்கார்ட் சுற்றில் ஏராளமான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் போட்டிக்குள் நுழைந்தார். இதற்குக் காரணம் இவரது பாடல் அல்ல, பிங்பிங் போன்ற தோற்றம்தான் என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு பக்கம் எதிர்ப்பு வலுவாக இருந்தது. இன்னொரு பக்கம் மாடல், நடிப்பு என்று வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன. விரைவிலேயே ஹி செங்ஷி பிரபலமானவராக மாறிப் போனார். இவர் எந்த மருத்துவமனையில் அழகு சிகிச்சை செய்துகொண்டார் என்ற ஆராய்ச்சிகள் நடந்தன. இறுதியில் இவரது காதலரின் மருத்துவமனை என்று ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இப்போது இந்த அழகு சிகிச்சை மருத்துவமனைக்கு ஏராளமானோர் படையெடுக்கிறார்கள்.
உறுதி செய்யப்படாத தகவல் என்றாலும் இந்த மருத்துவமனையும் செங்ஷியைப்போல பிரபலமாகிவிட்டது. இன்று சமூக வலைதளங்களில் பிங்பிங்கை விட ஹி செங்ஹிக்குதான் அதிக செல்வாக்கு. இவரை 17 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். பிரபலமான ஒருவரைப்போல தன்னை மாற்றிக்கொண்டாலும் தனக்கென தனியான அடையாளத்தைக் காட்டிவிட்டார். “எனக்கு ஃபான் பிங்பிங் மிகவும் பிடிக்கும்தான். அவரைப்போல என் உருவத்தை மாற்றிக்கொண்டதும் உண்மைதான். ஆனால் அவரது அடையாளத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அவர் அவர்தான், நான் நான்தான். ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் அவரைப்போல இருப்பதற்காக வந்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எனக்கென தனி அடையாளத்தை நான் உருவாக்கிக்கொண்டதால்தான் நான் இந்த அளவுக்குப் புகழ் பெற்றுள்ளேன்” என்கிறார் ஹி செங்ஷி.
அசலை முந்திய நகல்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT