எகிப்தில் பஸ்கள் மோதல்: 33 பேர் பலி

எகிப்தில் பஸ்கள் மோதல்: 33 பேர் பலி
Updated on
1 min read

எகிப்து நாட்டின் தெற்கு சினாய் பகுதியில் 2 சுற்றுலா பஸ்கள் வெள்ளிக்கிழமை காலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வெளிநாட்டினர் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 41 பேர் காயமடைந்தனர்.

இவ்விரு பஸ்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட சுமார் 80 பேர் பயணம் செய்தனர். ஷரம் இல் ஷேக் என்ற இடத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் இந்த பஸ்கள் மோதிக்கொண்டன.

விபத்து பற்றி அறிந்தவுடன் அங்கு 30 ஆம்புலன்சுகள் அனுப்பி வைக்கப்பட்டதாக சினாய் சுகாதார அமைச்சக அதிகாரி முகமது லஷின் கூறினார்.

“காயமடைந்தவர்களில் ரஷ்யா, ஏமன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். காயமடைந்த அனைவரும் இப்பகுதியில் 2 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது” என்றார் அவர்.

சாலை விபத்துகள் அதிகம் நிகழும் நாடுகளில் எகிப்தும் ஒன்று. பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது, பழுதடைந்த சாலைகள், பராமரிப்பற்ற வாகனங்கள் போன்ற காரணங்களால் எகிப்தில் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகள் அதிகரித்து வருகிறன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in