Published : 15 Jun 2018 09:03 AM
Last Updated : 15 Jun 2018 09:03 AM

உலக மசாலா: விநோதமான வெற்றி ஃபார்முலா!

தா

ய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் ‘ஸ்டானீமீஹோய்’ என்ற உணவகம் மற்ற உணவங்கங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த உணவகத்தின் ருசி அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. காரணம், இங்கே உணவு பரிமாறும் ஆண்களின் உடை, நடை, பாவனைகள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுகின்றன! உணவக ஊழியர்கள் அனைவரும் சிக்ஸ் பேக்ஸ் உடலுடன் பெண்களின் உடைகளை அணிந்து விநோதமாகக் காட்சியளிக்கிறார்கள். இந்த உணவகத்தின் உரிமையாளர் 34 வயது வீராசாக் மேசா, “நான் ஒரு காபி கடையை ஆரம்பிக்கத்தான் விரும்பினேன். ஒரு உணவகத்தில் அமர்ந்து நத்தை சூப், நண்டு வறுவல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஓட்டுடலிகளைச் சமைப்பதற்குப் பெரிய அளவில் உபகரணங்கள் தேவை இல்லை என்பதை அறிந்தேன். உடனே ஓட்டுடலிகளுக்கென்று தனியாக ஒரு உணவகம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். இணையதளங்களில் உணவகம் நடத்துவது குறித்துக் கற்றுத் தேர்ந்தேன். ஸ்டானீமீஹோய் என்ற பெயரில் உணவகத்தையும் ஆரம்பித்துவிட்டேன். ஆரம்பத்தில் வியாபாரமே ஆகவில்லை.

ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்குக் கூட வருமானம் வரவில்லை. மிகவும் துவண்டு போனேன். ஒருநாள் என் நண்பரின் அம்மா உணவகத்துக்கு வந்தார். ஒவ்வொரு உணவின் சுவையையும் அதிகரிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தார். பிறகு சுமாராக கூட்டம் வந்தது. என்ன செய்தால் என்னுடைய உணவகம் பிரபலமாகும் என்று யோசித்தேன். என் உணவகத்துக்குள் நுழையும்போதே மக்கள் புன்னகையுடன் வரவேண்டும். சாப்பிட்டுக் கிளம்பும்வரை அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆண் மாடல்களை உணவக ஊழியர்களாக மாற்றும் யோசனை தோன்றியது. ஆனால் அது உணவகத்தின் விற்பனையைப் பல மடங்கு உயர்த்துமா என்ற சந்தேகம் வந்தது.

இறுதியில் ஆண் மாடல்களுக்குப் பெண்கள் அணியும் கவர்ச்சி யான உடைகளை அணிய வைப்பது என்று முடிவு செய்தேன். பலரும் சிரித்தனர். உணவகத்தை 3 மாதங்கள் மூடினேன். வேலைக்குச் சேர்ந்தவர்கள் கூட இந்த உடை என்றதும் வேலையை விட்டு ஓடினார்கள். வழக்கத்தை விட நல்ல சம்பளம் பேசி, பயிற்சியளித்தேன். புதிய உணவகத்தைத் திறந்தேன். வெகு விரைவில் நான் விளம்பரம் செய்யாமலே உணவகம் பிரபலமானது. எங்கள் ஊழியர்களைப் பார்ப்பதற்காகவே வெகு தூரத்திலிருந்து மக்கள் வர ஆரம்பித்தனர். வியாபாரம் பெருகியது. பெண்கள் ரசிக்க மாட்டார்களோ என்ற அச்சம் முதலில் இருந்தது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ரசிக்கிறார்கள். ஊழியர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இந்த வெற்றி தந்த நம்பிக்கையில் பலரும் கிளைகள் ஆரம்பிக்கச் சொல்லி எங்களை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னுடைய நோக்கம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பது அல்ல. பணம் கொடுத்துச் சாப்பிட வரும் மக்கள், புன்னகை செய்துகொண்டே உணவுக்கான தொகையைத் திருப்தியாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அது நிறைவேறிவிட்டது. இந்த வாழ்க்கைக்கு இது போதும்” என்கிறார்.

விநோதமான வெற்றி ஃபார்முலா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x