

டெல் அவிவ்: இஸ்ரேலின் தெற்கு டெல் அவிவ் நகரில் இன்று (அக்.01) பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தெற்கு டெல் அவிவ் நகரில் உள்ள யாஃபா பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு மர்ம நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஏதேனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா என்றும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ரயில் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனினும் உயிரிழந்தவர்கள் குறித்த சரியான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.
அண்மையில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், லெபனானின் சில குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்தது. முன்னதாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இதுவரை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.