Published : 27 Aug 2014 11:17 AM
Last Updated : 27 Aug 2014 11:17 AM

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளுக்காக சண்டையிட்ட முதல் அமெரிக்க ஜிஹாதி மரணம்

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினருக்காக சண்டையிட்ட முதல் அமெரிக்க ஜிஹாதி டக்ளஸ் மெக் ஆர்தர் மெக்கெய்ன் பலியானதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த மெக் ஆர்தர் (33), ஜிஹாதியாக மாறி கிளர்ச்சிப்படைக்காக மரணமடைந்துள்ளது, அமெரிக்க அதிகாரிகள் பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெள்ளை மாளிகையில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கேட்டலின் ஹேடன் கூறுகையில்: "அமெரிக்கரான மெக் ஆர்தர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையில் இணைந்தது எங்களுக்கு தெரியும். அதுபோல், அவர் அங்கு சண்டையில் இறந்ததையும் உறுதி செய்கிறோம். தனிநபர்கள், இங்கிருந்து ஜிஹாதியாக மாறி வெளிநாடுகளுக்குச் சென்று வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்" என்றார்.

மெக் ஆர்தர், ஆலப்போ நகரில் நடந்த சண்டையில் இறந்ததாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மெக் ஆர்தர் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாத்தை தழுவினார். எப்படி அவரது செய்கை இந்த தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோ அதேபோல், அவர் ஜிஹாதியாக மாறிவிட்டார் என்ற செய்தி குடும்பத்தில் அனைவரையுமே புரட்டிப் போட்டுவிட்டது என அவரது மாமா மெக்கெய்ன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் இராக்கில், அமெரிக்க பாஸ்போர்ட்களுடன் 100 பேர் கிளர்ச்சிப்படையில் சண்டையிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x