

யார் வேண்டுமானாலும் போர் தொடங்கலாம். ஆனால், துணிச்சலானவர்களால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கிம் உடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே மிகவும் கடுமையான வார்த்தை மோதல் நடந்தது.
இரு நாடுகளும் தங்கள் ராணுவ பலம் மற்று அணு ஆயுத பலத்தை ஒப்பிட்டு வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. அத்துடன் வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடை விதித்தது.
இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் கிம் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு தென்கொரியா முக்கியக் காரணமாக இருந்தது.
இதையடுத்து சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துப் பேசினர்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார், அதில் ட்ரம்ப் பேசும்போது, “வடகொரியாவுடனான கசப்புணர்வு மறைந்துள்ளது. அமெரிக்காவும், வடகொரியாவும் புதிய வரலாறு படைக்கத் தயாராக உள்ளது. ஏவுகணை தளங்களை அழிப்பதாக வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. யாரும் போர் தொடங்கலாம். ஆனால் துணிச்சலானவர்களால்தான் அமைதியை உருவாக்க முடியும். அணுஆயுதங்களை அழிப்பதற்கு வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது. வடகொரியா தென் கொரியாவில் பிரிந்துள்ள குடும்பங்கள் விரைவில் ஒன்றிணையும். வெள்ளை மாளிகை வருமாறு வடகொரிய அதிபர் கிம்முக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்றார்.
இதற்கு முன்னரும் பல அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால் அமைதி வெறும் காகிதங்களில் மட்டுமே பார்க்கப்பட்டது என்ற கேள்விக்கு ட்ரம்ப்.” இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிர்வாகம் வேறு. அதிபர்கள் வேறு” என்று பதிலளித்தார்.